Powered By Blogger

Wednesday, March 22, 2023

அப்பா

 ஒற்றைச் சொல் , உயிரையும் உணர்வையும் , கொடுத்திட்ட அந்த ஒற்றை உறவு, 

மரணம் பிரித்ததாக, பூவுலகம் தரும் நம்பிக்கை.. 

உண்மையல்ல , என் மரணம் வரையிலும் பிடித்திருக்கும் தங்கள் கை .. 


Thursday, June 24, 2021

உருமாறிய வாழ்வியல்

 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை,

வகுப்பறைகள்,  மின்னணு கருவிகளில்... 

கோவில்கள் திறக்கப்படவில்லை, 

பூஜைகள் காணொளிகளில்.. .. 

அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, 

கணினிகளில் அலுவல் அறைகள்... 

வீடுகளில் தனிமை இல்லை, 

தனிமைப்படுத்த அறைகள் உண்டு... 

திருமணங்களில் கேளிக்கைகளில்லை,

பந்திகளில் எண்ணிக்கை ... 

இறப்பிற்கு அழுகை இல்லை

மனித மனம் மரத்துபோகின்றது... 

கடந்தகால வேதனைகளில்லை, 

நிகழ்காலம் மகிழ்ச்சியாக இல்லை... 

எதிர்காலத்தில், கடந்தகாலங்களை

எதிர்நோக்கி மனித மனம் !!!! 

Saturday, April 4, 2020

அகல்யா

கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை ..
மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில்
சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை..
செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , 
தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் ,
வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு...
ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து
ஆயிற்று .. ஓராண்டு ..

யதார்த்தம்

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற அறிவிப்பு பலகைகள், நாடெங்கும் ..
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...

Tuesday, August 16, 2016

பெண் சக்தி







நிர்பயாவை நிர்மூலமாக்கி , நகர வீதியில் எரிந்ததால் ,
முடங்கி விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
ஆயிரம் நிர்பயாக்களின் திடம் கொண்டு நிமிர்ந்து நடப்போமடா...
மீனுப்ரியாவின் மரணத்தால் , மனதில் பீதி கொண்டு
வீட்டிற்குள் துவண்டு விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
லட்சம் மீனுப்ரியாக்களின் தைரிய முகம் கொண்டு முன்னேறுவோமடா ..
சுவாதியை வீதியில் கொடூர கொலை செய்ததால்,
சுருண்டு வீழ்வோம் என்று எண்ணினாயோ  அரக்கனே..
கோடி சுவாதிகளின் சத்துவம் கொண்டு வாழ்வோமடா ..
இவையெல்லாம் கண்டு பெண் பிள்ளைகளை பூட்டி வைப்போம்
என்று எண்ணினாயோ  அரக்கனே...
இல்லை .. உன்னை போன்ற அரக்கர்களை
வதம் செய்யும் தெய்வ சக்தியாக வலம் வர செய்வோம் ....

பெண் சக்தி







நிர்பயாவை நிர்மூலமாக்கி , நகர வீதியில் எரிந்ததால் ,
முடங்கி விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
ஆயிரம் நிர்பயாக்களின் திடம் கொண்டு நிமிர்ந்து நடப்போமடா...
மீனுப்ரியாவின் மரணத்தால் , மனதில் பீதி கொண்டு
வீட்டிற்குள் துவண்டு விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
லட்சம் மீனுப்ரியாக்களின் தைரிய முகம் கொண்டு முன்னேறுவோமடா ..
சுவாதியை வீதியில் கொடூர கொலை செய்ததால்,
சுருண்டு வீழ்வோம் என்று எண்ணினாயோ  அரக்கனே..
கோடி சுவாதிகளின் சத்துவம் கொண்டு வாழ்வோமடா ..
இவையெல்லாம் கண்டு பெண் பிள்ளைகளை பூட்டி வைப்போம்
என்று எண்ணினாயோ  அரக்கனே...
இல்லை .. உன்னை போன்ற அரக்கர்களை
வதம் செய்யும் தெய்வ சக்தியாக வலம் வர செய்வோம் ....

Saturday, April 23, 2016

நாகரிகம்

அண்ணாச்சி கடையில ,
மளிகை சாமான் வாங்கையில,
கல்லும் மண்ணும் கிடக்குதுனு ,
பள பள மாளிகை கடையில , 
மளிகை சாமான் வாங்கினோம்,
பாலிதீன் பைகளில் பெருமையுடன் 
சுமந்து வந்தோம்...
பால்கார அண்ணாச்சி , பால்ல தண்ணீர் 
கலந்திருக்காருனு   , சொல்லி, சோப்பு நூறை 
கலந்த , பாக்கெட் பால் வாங்கி குடிச்சோம், 
கூடைக்கார கிழவி , பூச்சி வந்த கத்திரிகையும், 
வண்டு வந்த மாம்பழமும் , வைச்சுருகான்னு , 
பூச்சி கூட வேண்டாம்னு சொன்ன , காய்கறிகளையும் , 
பழங்களையும், பழமுதிற்சோலைகளில், 
பதவிசாக வாங்கி தின்னோம், 
இன்னைக்கு, அண்ணாச்சியும், கிழவியும், 
வீதியில பார்கையில, " ஏலே மக்கா நல்லா இருக்கியாலே "
என்று கேட்கையிலே , மருந்து கடையில வாங்கின, 
மருந்து சாமான எங்க போய் மறைக்க... ??

Monday, December 9, 2013

கனவுகள்

எத்தனை முறை பொய்த்தாலும் ,
கனவுகள் காண்பதை
கண்களும் , கைவிடவில்லை ,
பொய்ப்பதை
கனவுகளும்
கைவிடவில்லை ..
கனவுகள்
கனவுகளாகவே ..

Thursday, August 29, 2013

கோகுலாஷ்டமி




கண்ணனின் பிறந்த தின திருவிழா ..
வெண்ணையும், இனிப்பும் படையல் , 
என் கைகளால் செய்தேன் ..
வெண்ணை திருடனின் கால் தடங்களும் , 
என் கைகளால் செய்தேன் ,
கால் தடங்கள் பதிக்க , 
எந்த கண்ணனும்  இல்லையே ...
என் வீட்டினில்..


Saturday, August 3, 2013

நட்பு ...

நான் தோல்வியில் துவளும்போழுது , என்னை 
தோள் கொடுத்து தாங்கவில்லை ,.. நீ ..
தாங்க இயலாத சோதனைகளை வாழ்வில் சந்திக்கையில் , 
என் சோதனைகளை  களையவில்லை .. நீ ..
கண்களில் கண்ணீருடன் நான் தவிக்கும் பொழுது , 
உன் கை விரல்களால் கண்ணீரை துடைக்கவில்லை நீ ..
உறவுகள் அனைத்தும், உதறி சென்ற பொழுது , 
உடன் வரவில்லை நீ ...

மாறாக, நான் துவளும்போழுது , தோள்களில் தட்டி கொடுத்தாய் , 
வெற்றி பெற வைத்தாய் .. நீ 
என்  சோதனைகளை , சாதனைகளாக மாற்ற கற்று கொடுத்தாய் , 
கடக்க வைத்தாய் நீ ..
என்னை புன்னகை புரிய வைத்து , என் விரல்களால் , 
கண்ணீரை  துடைக்க  செய்தாய் நீ ..
புது உறவுகளை என் வாழ்வில் , 
பூக்க செய்தாய் நீ ....
நாம் கண்ணீர் சிந்தினாலும் , புன்னகை செய்தாலும் , 
புன்னகையை மட்டுமே  பதிலாக , படைக்கும் , 
தெய்வத்தை  போன்றவள் நீ .. என் தோழி ...

Tuesday, July 23, 2013

கோவில்,..




சிறு வயதில் பக்தியோடு மட்டுமே,  வலம் வந்த கோவிலை, 
இன்று உன் கரம் பிடித்து வலம் வருகிறேன், சிறு வெட்கத்தோடும் , 
சிறு காதலோடும் கூடிய பக்தியோடு... 
பச்சை பட்டுடுத்தி , மூக்குத்தியின் ஒளி மிளிர, காட்சி கொடுக்கும் 
அம்மனை கை கூப்பி  தொழுகையில் , கண்களில் ஏனோ கண்ணீர் ..
பக்தியிலா , இல்லை, .. உன் அருகில் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்திலா, 
புரியவில்லை .. 
சிறுமியாக பெற்றோருடன் அமர்ந்த தெப்பகுள படித்துறை, 
அன்று பிரசாதம் அருந்த மட்டுமே பிடிக்கும்.. 
இன்று உன்னோடு அமர்ந்திருக்கையில் , ரசிக்கிறேன், 
சுற்றியுள்ள காற்றையும் , நம்மோடு அமர்ந்திருக்கும் 
ஜோடிகளையும் ..., பொற்றாமரை குளத்தில், தாமரைகளை 
தேடும் உன் மலர்ந்த  முகத்தையும்.. 









Friday, June 28, 2013

மேல் மாடத்து ரோஜா


புகைப்படத்தை பார்த்து ,
உன்னை என் வாழ்க்கை
துணையாக ஏற்றதால் , 
ஆச்சரியம் கொள்ளும் 
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் 
தெரியாது....
உன் புகைப்படத்தை பார்த்து 
என்னுள் பூத்த காதல் ,
மேல் மாடத்து, பூந்தொட்டியில் , 
பூத்த  ரோஜாவை போன்று , 
அழகானது என்று.. 

Tuesday, June 25, 2013

பேருந்தில் குழந்தை


பேருந்தில் குழந்தை 
அம்மு, அழகி ..
கண்ணா, குட்டி..
செல்லம், தங்கம் ..
பட்டு, பாப்பு  என்று
வார்த்தைகளை ,
உச்சரிக்கும் முன்னரே,
மடியில் , தாவி
ஏறியது, பேருந்தில்
அருகில் அமர்ந்திருந்த,
குழந்தை ...

Monday, June 24, 2013

மழைக்கால காதல்


ஆயிரம் குறுஞ்செய்திகள் , 
சொல்லிய காதலை விட ,
மழைக்கால பருவத்தின்,
தேநீர் நேரத்தில், என்னை ,
ரசித்த உன் கண்கள், 
உணர்த்தியது அதிக காதலை...

Tuesday, June 18, 2013

ஒலியின் வலி ...


அதிகாலை சேவல் கூவும் குரல் , 
சூரிய கதிர்களோடு , ஜன்னலில்,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம், 
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின், 
புதிய பாடல்கள், மதிய 
உணவுக்கும், சேர்த்து சமைக்கும், 
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம், 
இவை அனைத்துமே இன்று, 
கைபேசி அலாரங்களாலும் , 
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி 
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் , 
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை , 
புதைக்கப்பட்டுவிட்டன... 

Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

தந்தையர் தினம்.. , உலகமே கொண்டாடுகிறது..
உங்களை கொண்டாடி வாழ்த்துகள், சொல்ல 
அருகில் நீங்கள் இல்லை. ..
நீங்கள் இவ்வுலகில் இருந்த காலங்களில், 
தந்தையர் தினம், என்கிற வழக்கமே இல்லை,
வருந்துகிறேன் இன்று.. , 
வாழ்த்துக்களும் உரைத்தேன் , காற்றோடு, 
உங்கள் செவிகளை, அடைந்த மகிழ்ச்சியுடன், 
தைரியமாக, வாழ்க்கையை,வாழ 
துவங்கினேன் தந்தையே. ..

Saturday, June 15, 2013

இணைய வலைபதிவுகள்

அன்பின் அறிவூட்டம் ,
எண்ணங்களின் எழுத்தோட்டம் , 
உணர்வுகளின் உயிரூட்டம்,
தமிழின் தேரோட்டம் ,
கனவுகளின் கருத்தோட்டம் ,
காதலின் கற்பனைதோட்டம் ,
கவிதையின், கால ஓட்டம் இணையத்தின் 
வலைபதிவுகள் ..

Friday, June 14, 2013

கணவன் மனைவி

கணவன் மனைவி
ஜெயுமான்

காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், 
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே 
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் 
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

Wednesday, June 12, 2013

மழைகால மேகங்கள்..

அடர்ந்த , மழைகால மேகங்கள் , 
மழையை பொழிவதற்கு முன்பு , 
நீல நிறத்து, சீதையின் ராமனையும், ...
கருமை நிறத்து, ராதையின் கண்ணனையும், 
ஏனோ நினைவு கூறுகின்றன ....